'ஆபரேஷன் அஜய்' மூலம் இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு
|டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களை அழைத்துக் கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந் தேதி இஸ்ரேல் மீது திடீரென சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்த இஸ்ரேல் அரசு காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இரு தரப்புக்கும் இடையே நடந்து வரும் இந்த அதிதீவிர போர் 7 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. இரு தரப்பிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலில் வசித்து வரும் பல்வேறு வெளிநாட்டவர்களும் இந்த போரில் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து, நேபாளம் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் பலர் இந்த போரில் கொல்லப்பட்டு உள்ளனர். எனவே இஸ்ரேலில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் மீட்டு வருகின்றன.
போர்க்களமாக மாறியிருக்கும் இஸ்ரேலில் இந்தியர்களும் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை அங்கிருந்து பத்திரமாக மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது. இதற்காக 'ஆபரேசன் அஜய்' என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதன்படி இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவார்கள் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்தார்.
அந்தவகையில் நேற்றைய தினம் 212 இந்தியர்கள் அடங்கிய முதல் குழுவுடன் சிறப்பு விமானம் ஒன்று இந்தியா வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து டெல் அவிவ் நகரில் இருந்து 235 இந்தியர்களை அழைத்துக் கொண்டு 2-வது சிறப்பு விமானம் இந்தியா புறப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
#OperationAjay
Flight #2 carrying 235 Indian nationals takes off from Tel Aviv. pic.twitter.com/avrMHAJrT4